நூல்கள்›பரிபாடல்›பாடல் 2514

பாடல் 2514

புல வரை அறியாப் புகழொடு பொலிந்து,

நில வரைத் தாங்கிய நிலைமையின் பெயராத்

தொலையா நேமி முதல், தொல் இசை அமையும்

புலவர் ஆய்பு உரைத்த புனை நெடுங் குன்றம்

பல; எனின், ஆங்கு-அவை பலவே: பலவினும், . . . .

நிலவரை ஆற்றி, நிறை பயன் ஒருங்கு உடன்

நின்று பெற நிகழும் குன்று -- அவை சிலவே:

சிலவினும் சிறந்தன, தெய்வம் பெட்புறும்

மலர் அகல் மார்பின் மை படி குடுமிய

குல வரை சிலவே: குல வரை சிலவினும் . . . .

சிறந்தது -- கல் அறை கடாம் கானலும் போலவும்,

புல்லிய சொல்லும் பொருளும் போலவும்,

எல்லாம் வேறு வேறு உருவின் ஒரு தொழில் இருவர்த்

தாங்கும் நீள் நிலை ஓங்கு இருங்குன்றம்.

நாறு இணர்த் துழாயோன் நல்கின் அல்லதை . . . .

ஏறுதல் எளிதோ, வீறு பெறு துறக்கம்?

அரிதின் பெறு துறக்கம் மாலிருங்குன்றம்

எளிதின் பெறல் உரிமை ஏத்துகம், சிலம்ப.

திருமால்

← பாடல் 2513பாடல் 2515 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்