பாடல் 2486
வள் உகிர வயல் ஆமை
வெள் அகடு கண் டன்ன,
வீங்கு விசிப் புதுப் போர்வைத்
தெண்கண் மாக்கிணை இயக்கி, என்றும்
மாறு கொண்டோர் மதில் இடறி, . . . .
நீறு ஆடிய நறுங் கவுள,
பூம்பொறிப் பணை எருத்தின,
வேறு வேறு பரந்து இயங்கி,
வேந்துடை மிளை அயல் பரக்கும்,
ஏந்து கோட்டு இரும்பிணர்த் தடக்கைத், . . . .
திருந்து தொழிற் பல பகடு
பகைப்புல மன்னர் பணிதிறை தந்து, நின்
நசைப்புல வாணர் நல்குரவு அகற்றி,
மிகப்பொலியர், தன் சேவடியத்தை! என்று
யாஅன் இசைப்பின், நனிநன்று எனாப், . . . .
பலபிற வாழ்த்த இருந்தோர் தங்கோன்!
மருவ இன்நகர் அகன் கடைத்தலைத்,
திருந்துகழல் சேவடி குறுகல் வேண்டி,
வென் றிரங்கும் விறன் முரசினோன்,
என் சிறுமையின், இழித்து நோக்கான் . . . .
தன் பெருமையின் தகவு நோக்கிக்,
குன்று உறழ்ந்த களி றென்கோ;
கொய் யுளைய மா என்கோ?
மன்று நிறையும் நிரை என்கோ?
மனைக் களமரொடு களம் என்கோ? . . . .
ஆங்கவை கனவுஎன மருள, வல்லே, நனவின்
நல்கி யோனே, நகைசால் தோன்றல்;
ஊழி வாழி, பூழியர் பெருமகன்!
பிணர் மருப்பு யானைச் செருமிகு நோன்தாள்
செல்வக் கடுங்கோ வாழி யாதன் . . . .
ஒன்னாத் தெவ்வர் உயர்குடை பணிந்து, இவன்
விடுவர் மாதோ நெடிதோ நில்லாப்
புல்லிளை வஞ்சிப் புறமதில் அலைக்கும்
கல்லென் பொருநை மணலினும், ஆங்கண்
பல்லூர் சுற்றிய கழனி . . . .
எல்லாம் விளையும் நெல்லினும் பலவே.
சிறுமையும் தகவும்!