பாடல் 2474
அலங்குகதிர் சுமத்த கலங்கற் சூழி
நிலைதளர்வு தொலைந்த ஒல்குநிலைப் பல்காற்
பொதியில் ஒருசிறை பள்ளி யாக
முழாவரைப் போந்தை அரவாய் மாமடல்
நாரும் போழும் கிணையோடு சுருக்கி, . . . .
ஏரின் வாழ்நர் குடிமுறை புகாஅ,
ஊழ் இரந்து உண்ணும் உயவல் வாழ்வைப்
புரவுஎதிர்ந்து கொள்ளும் சான்றோர் யார்? எனப்
புரசம் தூங்கும் அறாஅ யாணர்,
வரையணி படப்பை, நன்னாட்டுப் பொருந! . . . .
பொய்யா ஈகைக் கழல்தொடி ஆஅய்!
யாவரும் இன்மையின் கிணைப்பத், தாவது,
பெருமழை கடல்பரந் தாஅங்கு, யானும்
ஒருநின் உள்ளி வந்தனென்; அதனால்
புலவர் புக்கில் ஆகி, நிலவரை . . . .
நிலீ இயர் அத்தை, நீயே! ஒன்றே
நின்னின்று வறுவிது ஆகிய உலகத்து,
நிலவன் மாரோ, புரவலர்! துன்னிப்,
பெரிய ஓதினும் சிறிய உணராப்
பீடின்று பெருகிய திருவின், . . . .
பாடில், மன்னரைப் பாடன்மார் எமரே!
பாடன்மார் எமரே!