நூல்கள்›புறநானூறு›பாடல் 2468

பாடல் 2468

இருப்புமுகம் செறிந்த ஏந்தொழில் மருப்பின்,

கருங்கை யானை கொண்மூவாக,

நீண்மொழி மறவர் எறிவனர் உயர்த்த

வாள்மின் நாக, வயங்குடிப்பு அமைந்த

குருதிப் பலிய முரசுமுழக் காக, . . . .

அரசராப் பனிக்கும் அணங்குறு பொழுதின்,

வெவ் விசைப் புரவி வீசுவளி யாக,

விசைப்புறு வல்வில் வீங்குநாண் உகைத்த

கணைத்துளி பொழிந்த கண்ணகன் கிடக்கை,

ஈரச் செறுவயின் தேர்ஏ ராக, . . . .

விடியல் புக்கு, நெடிய நீட்டி, நின்

செருப்படை மிளிர்ந்த திருத்துறு பைஞ்சால்.

பிடித்தெறி வெள்வேல் கணையமொடு வித்தி,

விழுத்தலை சாய்த்த வெருவரு பைங்கூழ்ப்,

பேய்மகள் பற்றிய பிணம்பிறங்கு பல்போர்பு, . . . .

கணநரி யோடு கழுதுகளம் படுப்பப்,

பூதங் காப்பப் பொலிகளந் தழீஇப்,

பாடுநர்க்கு இருந்த பீடுடை யாள!

தேய்வை வெண்காழ் புரையும் விசிபிணி

வேய்வை காணா விருந்தின் போர்வை . . . .

அரிக்குரல் தடாரி உருப்ப ஒற்றிப்,

பாடி வந்திசின் பெரும; பாடான்று

எழிலி தோயும் இமிழிசை யருவிப்,

பொன்னுடை நெடுங்கோட்டு, இமையத் தன்ன

ஓடைநுதல, ஒல்குதல் அறியாத், . . . .

துடியடிக் குழவிய பிடியிடை மிடைந்த

வேழ முகவை நல்குமதி;

தாழா ஈகைத், தகை வெய் யோயே!

போர்க்களமும் ஏர்க்களமும்!

← பாடல் 2467பாடல் 2469 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்