நூல்கள்›புறநானூறு›பாடல் 2462

பாடல் 2462

இருங்கடல் உடுத்தஇப் பெருங்கண் மாநிலம்

உடைஇலை நடுவணது இடைபிறர்க்கு இன்றித்,

தாமே ஆண்ட ஏமம் காவலர்

இடுதிரை மணலினும் பலரே; சுடுபிணக்

காடுபதி யாகப் போகித், தத்தம் . . . .

நாடு பிறர்கொளச் சென்றுமாய்ந் தனரே;

அதனால் நீயும் கேண்மதி அத்தை! வீயாது

உடம்பொடு நின்ற உயிரும் இல்லை;

மடங்கல் உண்மை மாயமோ அன்றே;

கள்ளி ஏய்ந்த முள்ளியம் புறங்காட்டு . . . .

வெள்ளில் போகிய வியலுள் ஆங்கண்,

உப்பிலாஅ அவிப் புழுக்கல்

கைக் கொண்டு, பிறக்கு நோக்காது,

இழி பிறப்பினோன் ஈயப் பெற்று,

நிலங்கல னாக, இலங்குபலி மிசையும் . . . .

இன்னா வைகல் வாரா முன்னே,

செய்ந்நீ முன்னிய வினையே,

முந்நீர் வரைப்பகம் முழுதுடன் துறந்தே.

உடம்பொடு நின்ற உயிரும் இல்லை!

← பாடல் 2461பாடல் 2463 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்