பாடல் 2337
கவிசெந் தாழிக் குவிபுறத்து இருந்த
செவிசெஞ் சேவலும் பொகுவலும் வெருவா,
வாய் வன் காக்கையும் கூகையும் கூடிப்
பேஎய் ஆயமொடு பெட்டாங்கு வழங்கும்
காடுமுன் னினனே, கட்கா முறுநன்; . . . .
தொடிகழி மகளிரின் தொல்கவின் வாடிப்,
பாடுநர் கடும்பும் பையென் றனவே;
தோடுகொள் முரசும் கிழிந்தன, கண்ணே;
ஆள்இல், வரைபோல் யானையும் மருப்புஇழந் தனவே;
வெந்திறல் கூற்றம் பெரும்பேது உறுப்ப, . . . .
எந்தை ஆகுல அதற்படல் அறியேன்;
அந்தோ! அளியேன் வந்தனென்; மன்ற
என்ஆ குவர்கொல், என் துன்னி யோரே?
மாரி இரவின், மரங்கவிழ் பொழுதின்,
ஆரஞர் உற்ற நெஞ்சமொடு, ஓராங்குக் . . . .
கண்இல் ஊமன் கடற்பட் டாங்கு,
வரையளந்து அறியாத் திரையரு நீத்தத்து,
அவல மறுசுழி மறுகலின்,
தவலே நன்றுமன்; தகுதியும் அதுவே.
தகுதியும் அதுவே!