நூல்கள்›புறநானூறு›பாடல் 2310

பாடல் 2310

அஞ்சுவரு மரபின் வெஞ்சினப் புயலேறு

அணங்குடை அரவின் அருந்தலை துமிய,

நின்றுகாண் பன்ன நீள்மலை மிளிரக்,

குன்றுதூவ எறியும் அரவம் போல,

முரசு எழுந்து இரங்கும் தானையோடு தலைச்சென்று, . . . .

அரைசுபடக் கடக்கும் உரைசால் தோன்றல்! நின்

உள்ளி வந்த ஓங்குநிலைப் பரிசிலென்,

`வள்ளியை ஆதலின் வணங்குவன் இவன் எனக்,

கொள்ளா மாந்தர் கொடுமை கூற, நின்

உள்ளியது முடிந்தோய் மன்ற; முன்னாள் . . . .

கையுள் ளதுபோல் காட்டி, வழிநாள்

பொய்யொடு நின்ற புறநிலை வருத்தம்

நாணாய் ஆயினும், நாணக் கூறி, என்

நுணங்கு செந்நா அணங்க ஏத்திப்,

பாடப் பாடப் பாடுபுகழ் கொண்டநின் . . . .

ஆடுகொள் வியன்மார்பு தொழுதெனன் பழிச்சிச்

செல்வல் அத்தை, யானே வைகலும்,

வல்சி இன்மையின் வயின்வயின் மாறி,

இல்எலி மடிந்த தொல்சுவர் வரைப்பின்,

பாஅல் இன்மையின் பல்பாடு சுவைத்து, . . . .

முலைக்கோள் மறந்த புதல்வனொடு,

மனைத் தொலைந்திருந் தவென்வாள் நுதற் படர்ந்தே.

நாணக் கூறினேன்!

← பாடல் 2309பாடல் 2311 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்