நூல்கள்›புறநானூறு›பாடல் 2297

பாடல் 2297

'அருவி தாழ்ந்த பெருவரை போல

ஆரமொடு பொலிந்த மார்பின் தண்டாக்,

கடவுள் சான்ற, கற்பின் சேயிழை

மடவோள் பயந்த மணிமருள் அவ்வாய்க்

கிண்கிணிப் புதல்வர் பொலிக!' என்று ஏத்தித், . . . .

திண்தேர் அண்ணல் நிற்பா ராட்டிக்,

காதல் பெறாமையின் கனவினும் அரற்றும்என்

காமர் நெஞ்சம் ஏமாந்து உவப்ப,

ஆல்அமர் கடவுள் அன்னநின் செல்வம்,

வேல்கெழு குருசில்! கண்டேன்; ஆதலின், . . . .

விடுத்தனென்; வாழ்க, நின் கண்ணி! தொடுத்த

தண்டமிழ் வரைப்புஅகம் கொண்டி யாகப்,

பணிந்துக்கூட் டுண்ணும் மணிப்பருங் கடுந்திறல்

நின்னோ ரன்னநின் புதல்வர், என்றும்,

ஒன்னார் வாட அருங்கலம் தந்து, நும் . . . .

பொன்னுடை நெடுநகர் நிறைய வைத்தநின்

முன்னோர் போல்க; இவர் பெருங்கண் ணோட்டம்!

யாண்டும் நாளும் பெருகி, ஈண்டுதிரைப்

பெருங்கடல் நீரினும், அக்கடல் மணலினும்,

நீண்டுஉயர் வானத்து உறையினும், நன்றும், . . . .

இவர்பெறும் புதல்வர்க் காண்தொறும், நீயும்,

புகன்ற செல்வமொடு புகழ்இனிது விளங்கி,

நீடு வாழிய! நெடுந்தகை; யானும்

கேளில் சேஎய் நாட்டின், எந் நாளும்,

துளிநசைப் புள்ளின்நின் அளிநசைக்கு இரங்கி, நின் . . . .

அடிநிழல் பழகிய வடியுறை;

கடுமான் மாற! மறவா தீமே.

மறவாது ஈமே!

← பாடல் 2296பாடல் 2298 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்