பாடல் 2289
விளைபதச் சீறிடம் நோக்கி, வளைகதிர்
வல்சி கொண்டு, அளை மல்க வைக்கும்
எலிமுயன் றனைய ராகி, உள்ளதம்
வளன்வலி உறுக்கும் உளம் இலாளரோடு
இயைந்த கேண்மை இல்லா கியரோ! . . . .
கடுங்கண் கேழல் இடம்பட வீழ்ந்தென,
அன்று அவண் உண்ணா தாகி, வழிநாள்,
பெருமலை விடரகம் புலம்ப, வேட்டெழுந்து,
இருங்களிற்று ஒருத்தல் நல்வலம் படுக்கும்
புலிபசித் தன்ன மெலிவில் உள்ளத்து . . . .
உரனுடை யாளர் கேண்மையொடு
இயைந்த வைகல் உளவா கியரோ!
எலி முயன்றனையர்!