பாடல் 2269
மரைபிரித்து உண்ட நெல்லி வேலிப்,
பரலுடை முன்றில், அங்குடிச் சீறூர்,
எல்அடிப் படுத்த, கல்லாக் காட்சி
வில்லுழுது உண்மார் நாப்பண், ஒல்லென,
இழிபிறப் பாளன் கருங்கை சிவப்ப, . . . .
வலிதுரந்து சிலைக்கும் வன்கண் கடுந்துடி,
புலிதுஞ்சு நெடுவரைக் குடிஞையோடு இரட்டும்
மலைகெழு நாடன் கூர்வேல் பிட்டன்,
குறுகல் ஓம்புமின், தெவ்விர்; அவனே
சிறுகண் யானை வெண்கோடு பயந்த . . . .
ஒளிதிகழ் முத்தம் விறலியர்க்கு ஈந்து,
நார்பிழிக் கொண்ட வெங்கள் தேறல்
பண்அமை நல்யாழ்ப் பாண்கடும்பு அருத்தி,
நசைவர்க்கு மென்மை அல்லது, பகைவர்க்கு
இரும்புபயன் படுக்குங் கருங்கைக் கொல்லன் . . . .
விசைத்துஎறி கூடமொடு பொருஉம்
உலைக்கல் அன்ன, வல்லா ளன்னே.
உலைக்கல்லன்ன வல்லாளன்!