நூல்கள்›புறநானூறு›பாடல் 2251

பாடல் 2251

வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழி

பேழ்வாய் உழுவையைப் பெரும்பிறிது உறீஇப்,

புழல்தலை புகர்க்கலை உருட்டி, உரல்தலைக்

கேழற் பன்றி வீழ, அயலது

ஆழற் புற்றத்து உடும்பில் செற்றும், . . . .

வல்வில் வேட்டம் வலம்படுத் திருந்தோன்,

புகழ்சால் சிறப்பின் அம்புமிகத் திளைக்கும்

கொலைவன் யார்கொலோ? கொலைவன் மற்று இவன்

விலைவன் போலான்: வெறுக்கைநன்கு உடையன்:

ஆரம் தாழ்ந்த அம்பகட்டு மார்பின், . . . .

சாரல் அருவிப் பயமலைக் கிழவன்,

ஓரி கொல்லோ? அல்லன் கொல்லோ?

பாடுவல், விறலி! ஓர் வண்ணம்; நீரும்

மண்முழா அமைமின்; பண்யாழ் நிறுமின்;

கண்விடு தூம்பின் களிற்று உயிர் தொடுமின்; . . . .

எல்லரி தொடுமின்; ஆகுளி தொடுமின்;

பதலை ஒருகண் பையென இயக்குமின்;

மதலை மாக்கோல் கைவலம் தமின்' என்று,

இறைவன் ஆகலின், சொல்லுபு குறுகி,

மூவேழ் துறையும் ழுறையுளிக் கழிப்பிக், . . . .

'கோ'வெனப் பெயரிய காலை, ஆங்கு அது

தன்பெயர் ஆகலின் நாணி, மற்று, யாம்

நாட்டிடன் நாட்டிடன் வருதும்; ஈங்கு ஓர்

வேட்டுவர் இல்லை, நின் ஒப் போர்' என,

வேட்டது மொழியவும் விடாஅன், வேட்டத்தில் . . . .

தான் உயிர் செகுத்த மான் நிணப் புழுக்கோடு,

ஆன் உருக்கு அன்ன வேரியை நல்கித்,

தன்மலைப் பிறந்த தாவில் நன்பொன்

பன்மணிக் கு வையொடும் விரைஇக், 'கொண்ம்' எனச்,

சுரத்துஇடை நல்கி யோனே: விடர்ச் சிமை . . . .

ஓங்குஇருங் கொல்லிப் பொருநன்,

ஓம்பா ஈகை விறல்வெய் யோனே!

பெயர் கேட்க நாணினன்!

← பாடல் 2250பாடல் 2252 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்