பாடல் 2172
மெல்ல வந்து, என் நல்லடி பொருந்தி,
ஈயென இரக்குவர் ஆயின், சீருடை
முரசுகெழு தாயத்து அரசோ தஞ்சம்;
இன்னுயிர்ஆயினும்கொடுக்குவென், இந்நிலத்து
ஆற்றல் உடையோர் ஆற்றல் போற்றாது, என் . . . .
உள்ளம் எள்ளிய மடவோன், தெள்ளிதின்
துஞ்சு புலி இடறிய சிதடன் போல,
உய்ந்தனன் பெயர்தலோ அரிதே; மைந்துடைக்
கழைதின் யானைக் கால் அகப் பட்ட
வன்றிணி நீண்முளை போலச், சென்று அவண் . . . .
வருந்தப் பொரேஎன் ஆயின், பொருந்திய
தீது இல் நெஞ்சத்துக் காதல் கொள்ளாப்
பல்லிருங் கூந்தல் மகளிர்
ஒல்லா முயக்கிடைக் குழைக, என் தாரே!
உயிரும் தருகுவன்!