நூல்கள்›புறநானூறு›பாடல் 2157

பாடல் 2157

நீயே, தண்புனற் காவிரிக் கிழவனை; இவளே,

முழுமுதல் தொலைந்த கோளி ஆலத்துக்

கொழுநிழல் நெடுஞ்சினை வீழ்பொறுத் தாங்குத்,

தொல்லோர் மாய்ந்தெனத் துளங்கல் செல்லாது.

நல்லிசை முதுகுடி நடுக்குஅறத் தழீஇ, . . . .

இளையது ஆயினும் கிளைஅரா எறியும்,

அருநரை உருமின், பெருநரைப் பொறாஅச்

செருமாண் பஞ்சவர் ஏறே; நீயே,

அறந்துஞ்சு உறந்தைப் பொருநனை; இவனே,

நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளியவென, . . . .

வரைய சாந்தமும், திரைய முத்தமும்,

இமிழ்குரல் முரசம் மூன்றுடன் ஆளும்,

தமிழ்கெழு கூடல் தண்கோல் வேந்தே;

பால்நிற உருவின் பனைக்கொடி யோனும்,

நீல்நிற உருவின், நேமியோனும், என்று . . . .

இருபெருந் தெய்வமும் உடன் நின் றாஅங்கு,

உருகெழு தோற்றமொடு உட்குவர விளங்கி,

இந்நீர் ஆகலின், இனியவும் உளவோ?

இன்னும் கேண்மின் நும் இசைவா ழியவே;

ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர்; இருவீரும் . . . .

உடனிலை திரியீர் ஆயின், இமிழ்திரைப்

பெளவம் உடுத்தஇப் பயங்கெழு மாநிலம்

கையகப் படுவது பொய்யா காதே;

அதனால், நல்ல போலவும், நயவ போலவும்,

தொல்லோர் சென்ற நெறியர் போலவும், . . . .

காதல் நெஞ்சின்நும் புணர்ச்சி; வென்று வென்று

அடுகளத்து உயர்க நும் வேலே; கொடுவரிக்

கோள்மாக் குயின்ற சேண்விளங்கு தொடுபொறி

நெடுநீர்க் கெண்டையொடு பொறித்த

குடுமிய ஆக, பிறர் குன்றுகெழு நாடே . . . .

புலியும் கயலும்!

← பாடல் 2156பாடல் 2158 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்