பாடல் 2155
ஏற்று வலன் உயரிய எரி மருள் அவிர் சடை,
மாற்று அருங் கணிச்சி மணி மிடற்றோனும்,
கடல் வளர் புரி வளை புரையும் மேனி,
அடல் வெந்நாஞ்சில் பனைக்கொடியோனும்,
மண்ணுறு திருமணி புரையும் மேனி, . . . .
விண் உயர் புள் கொடி விறல் வெய்யோனும்,
மணி மயில் உயரிய மாறா வென்றிப்
பிணிமுக ஊர்தி ஒண் செய்யோனும், என
ஞாலங் காக்கும் கால முன்பின்,
தோலா நல் இசை நால்வர் உள்ளும், . . . .
கூற்று ஒத்தீயே மாற்று அருஞ் சீற்றம்,
வலி ஒத்தீயே வாலியோனைப்,
புகழ் ஒத்தீயே இகழுநர் அடுநனை,
முருகு ஒத்தீயே முன்னியது முடித்தலின்,
ஆங்கு ஆங்கு அவரவர் ஒத்தலின் யாங்கும் . . . .
அரியவும் உளவோ நினக்கே அதனால்,
இரவலர்க்கு அருங்கலம் அருகாது ஈயா
யவனர் நன்கலம் தந்த தண் கமழ் தேறல்
பொன் செய் புனை கலத்து ஏந்தி நாளும்
ஒண்தொடி மகளிர் மடுப்ப, மகிழ் சிறந்து, . . . .
ஆங்கு இனிது ஒழுகுமதி ஓங்கு வாள் மாற
அங்கண் விசும்பின் ஆரிருள் அகற்றும்
வெங்கதிர்ச் செல்வன் போலவும், குடதிசைத்
தண் கதிர் மதியம் போலவும்
நின்று நிலைஇயர், உலகமோடு உடனே! . . . .
கடவுளரும் காவலனும்!