பாடல் 2133
ஆன்மலை அறுத்த அறனி லோர்க்கும்,
மாண்இழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்,
குரவர்த் தப்பிய கொடுமை யோர்க்கும்,
வழுவாய் மருங்கின் கழுவாயும் உள என,
நிலம்புடை பெயர்வ தாயினும், ஒருவன் . . . .
செய்தி கொன்றோர்க்கு உய்தி இல் என
அறம் பாடின்றே ஆயிழை கணவ!
காலை அந்தியும், மாலை அந்தியும்,
புறவுக் கருவன்ன புன்புல வரகின்
பாற்பெய் புன்கம் தேனொடு மயக்கிக், . . . .
குறுமுயற் கொழுஞ்சூடு கிழித்த ஒக்கலொடு,
இரத்தி நீடிய அகன்தலை மன்றத்துக்,
கரப்பில் உள்ளமொடு வேண்டுமொழி பயிற்றி,
அமலைக் கொழுஞ்சோறு ஆர்ந்த பாணர்க்கு
அகலாச் செல்வம் முழுவதும் செய்தோன், . . . .
எங்கோன்,வளவன் வாழ்க! என்று, நின்
பீடுகெழு நோன்தாள் பாடேன் ஆயின்,
படுபறி யலனே, பல்கதிர்ச் செல்வன்;
யானோ தஞ்சம்; பெரும! இவ் வுலகத்துச்
சான்றோர் செய்த நன்றுண் டாயின், . . . .
இமையத்து ஈண்டி, இன்குரல் பயிற்றிக்,
கொண்டல் மாமழை பொழிந்த
நுண்பல் துளியினும் வாழிய, பலவே!
செய்தி கொன்றவர்க்கு உய்தி இல்லை!