பாடல் 2132
கான் உறை வாழ்க்கைக் கதநாய், வேட்டுவன்
மான்தசை சொரிந்த வட்டியும், ஆய்மகள்
தயிர்கொடு வந்த தசும்பும், நிறைய,
ஏரின் வாழ்நர் பேரில் அரிவையர்
குளக்கீழ் விளைந்த களக்கொள் வெண்ணெல் . . . .
முகந்தனர் கொடுப்ப, உகந்தனர் பெயரும்
தென்னம் பொருப்பன் புன்னாட்டுள்ளும்,
ஏழெயில் கதவம் எறிந்து, கைக்கொண்டு நின்;
பேழ்வாய் உழுவை பொறிக்கும் ஆற்றலை;
பாடுநர் வஞ்சி பாடப், படையோர் . . . .
தாதுஎரு மறுகின் பாசறை பொலியப்,
புலராப் பச்சிலை இடையிடுபு தொடுத்த
மலரா மாலைப் பந்துகண் டன்ன
ஊன்சோற் றமலை பான்கடும்பு அருத்தும்
செம்மற்று அம்மநின் வெம்முனை இருக்கை; . . . .
வல்லோன் தைஇய வரிவனப்பு உற்ற
அல்லிப் பாவை ஆடுவனப்பு ஏய்ப்பக்
காம இருவர் அல்லது, யாமத்துத்
தனிமகன் வழங்காப் பனிமலர்க் காவின்,
ஒதுக்குஇன் திணிமணல் புதுப்பூம் பள்ளி . . . .
வாயின் மாடந்தொறும் மைவிடை வீழ்ப்ப
நீஆங்குக் கொண்ட விழவினும் பலவே.
புதுப்பூம் பள்ளி!