நூல்கள்›புறநானூறு›பாடல் 2123

பாடல் 2123

நெல் அரியும் இருந் தொழுவர்

செஞ் ஞாயிற்று வெயில் முனையின்,

தென் கடல்திரை மிசைப்பா யுந்து;

திண் திமில் வன் பரதவர்

வெப் புடைய மட் டுண்டு, . . . .

தண் குரவைச் சீர்தூங் குந்து;

தூவற் கலித்த தேம்பாய் புன்னை

மெல்லிணர்க் கன்ணி மிலைந்த மைந்தர்

எல்வளை மகளிர்த் தலைக்கை தரூஉந்து;

வண்டுபட மலர்ந்த தண்ணறுங் கானல் . . . .

முண்டகக் கோதை ஒண்டொடி மகளிர்

இரும் பனையின் குரும்பை நீரும்,

பூங் கரும்பின் தீஞ் சாறும்

ஓங்கு மணற் குலவுத் தாழைத்

தீ நீரோடு உடன் விராஅய், . . . .

முந்நீர் உண்டு முந்நீர்ப் பாயும்;

தாங்கா உறையுள் நல்லூர் கெழீஇய

ஒம்பா ஈகை மாவேள் எவ்வி

புனலம் புதவின் மிழலையொடு கழனிக்

கயலார் நாரை போர்வில் சேக்கும், . . . .

பொன்னணி யானைத் தொன்முதிர் வேளிர்,

குப்பை நெல்லின், முத்தூறு தந்த

கொற்ற நீள்குடைக், கொடித்தேர்ச் செழிய!

நின்று நிலைஇயர் நின் நாண்மீன்; நில்லாது

படாஅச் செலீஇயர், நின்பகைவர் மீனே; . . . .

நின்னொடு, தொன்றுமூத்த உயிரினும், உயிரொடு

நின்று மூத்த யாக்கை யன்ன, நின்

ஆடுகுடி மூத்த விழுத்திணைச் சிறந்த

வாளின் வாழ்நர் தாள்வலம் வாழ்த்த,

இரவன் மாக்கள் ஈகை நுவல, . . . .

ஒண்டொடி மகளிர் பொலங்கலத்து ஏந்திய

தண்கமழ் தேறல் மடுப்ப, மகிழ்சிறந்து,

ஆங்குஇனிது ஒழுகுமதி, பெரும! ஆங்கது

வல்லுநர் வாழ்ந்தோர், என்ப, தொல்லிசை,

மலர்தலை உலகத்துத் தோன்றிப் . . . .

பலர்செலச் செல்லாது, நின்று விளிந் தோரே.

வல்லுனர் வாழ்ந்தோர்!

← பாடல் 2122பாடல் 2124 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்