பாடல் 2079
உலோச்சனார்
நிலாவின் இலங்கு மணல் மலி மறுகில்,
புலால் அம் சேரிப், புல் வேய் குரம்பை,
ஊர் என உணராச் சிறுமையொடு, நீர் உடுத்து,
இன்னா உறையுட்டு ஆயினும், இன்பம்
ஒரு நாள் உறைந்திசி னோர்க்கும், வழி நாள், . . . .
தம் பதி மறக்கும் பண்பின் எம் பதி
வந்தனை சென்மோ வளை மேய் பரப்ப!
பொம்மற் படு திரை கம்மென உடைதரும்
மரன் ஓங்கு ஒரு சிறைப் பல பாராட்டி,
எல்லை எம்மொடு கழிப்பி, எல் உற, . . . .
நல் தேர் பூட்டலும் உரியீர்; அற்றன்று,
சேந்தனிர் செல்குவிர் ஆயின், யாமும்
எம் வரை அளவையில் பெட்குவம்;
நும் ஒப்பதுவோ? உரைத்திசின் எமக்கே.
மணிமிடைபவளம்