பாடல் 2076
மாமூலனார்
மா மலர் வண்ணம் இழந்த கண்ணும்,
பூ நெகிழ் அணையின் சாஅய தோளும்,
நன்னர் மாக்கள் விழைவனர் ஆய்ந்த
தொல் நலம் இழந்த துயரமொடு, என்னதூஉம்
இனையல் வாழி, தோழி! முனை எழ . . . .
முன்னுவர் ஓட்டிய முரண் மிகு திருவின்,
மறம் மிகு தானைக், கண்ணன் எழினி
தேம் முது குன்றம் இறந்தனர் ஆயினும்,
நீடலர் யாழ, நின் நிரை வளை நெகிழ
தோள் தாழ்பு இருளிய குவை இருங் கூந்தல் . . . .
மடவோள் தழீஇய விறலோன் மார்பில்
புன் தலைப் புதல்வன் ஊர்பு இழிந்தாங்குக்,
கடுஞ்சூல் மடப் பிடி தழீஇய வெண் கோட்டு
இனம்சால் வேழம், கன்று ஊர்பு இழிதர,
பள்ளி கொள்ளும் பனிச் சுரம் நீந்தி, . . . .
ஒள் இணர்க் கொன்றை ஓங்கு மலை அத்தம்
வினை வலி யுறூஉம் நெஞ்சமொடு
இனையர் ஆகி, நப் பிரிந்திசினோரே.
மணிமிடைபவளம்