பாடல் 2063
மதுரை மருதன் இளநாகனார்
கடவுள் கற்பொடு குடிக்கு விளக்கு ஆகிய
புதல்வற் பயந்த புகழ் மிகு சிறப்பின்
நன்ன ராட்டிக்கு அன்றியும், எனக்கும்
இனிது ஆகின்றால்; சிறக்க, நின் ஆயுள்!
அருந் தொழில் முடித்த செம்மல் உள்ளமொடு . . . .
சுரும்பு இமிர் மலர கானம் பிற்பட,
வெண் பிடவு அவிழ்ந்த வீ கமழ் புறவில்
குண்டைக் கோட்ட குறு முள் கள்ளிப்
புன் தலை புதைத்த கொழுங் கொடி முல்லை
ஆர் கழல் புதுப் பூ உயிர்ப்பின் நீக்கி, . . . .
தெள் அறல் பருகிய திரிமருப்பு எழிற் கலை
புள்ளி அம் பிணையொடு வதியும் ஆங்கண்,
கோடுடைக் கையர், துளர் எறி வினைஞர்,
அரியல் ஆர்கையர், விளைமகிழ் தூங்க,
செல்கதிர் மழுகிய உருவ ஞாயிற்றுச் . . . .
செக்கர் வானம் சென்ற பொழுதில்,
கற் பால் அருவியின் ஒலிக்கும் நல் தேர்த்
தார் மணி பல உடன் இயம்ப
சீர் மிகு குருசில்! நீ வந்து நின்றதுவே.
மணிமிடைபவளம்