பாடல் 2046
கடியலூர் உருத்திரங் கண்ணனார்
வயங்கு மணி பொருத வகைஅமை வனப்பின்
பசுங் காழ் அல்குல் மாஅயோளொடு
வினை வனப்பு எய்திய புனை பூஞ் சேக்கை,
விண் பொரு நெடு நகர்த் தங்கி, இன்றே
இனிது உடன் கழிந்தன்று மன்னே; நாளைப் . . . .
பொருந்தாக் கண்ணேம் புலம்பு வந்து உறுதரச்
சேக்குவம் கொல்லோ, நெஞ்சே! சாத்து எறிந்து
அதர் கூட்டுண்ணும் அணங்குடைப் பகழிக்
கொடு வில் ஆடவர் படு பகை வெரீஇ,
ஊர் எழுந்து உலறிய பீர் எழு முது பாழ், . . . .
முருங்கை மேய்ந்த பெருங்கை யானை
வெரிந் ஓங்கு சிறு புறம் உரிஞ, ஒல்கி
இட்டிகை நெடுஞ் சுவர் விட்டம் வீழ்ந்தென,
மணிப் புறாத் துறந்த மரம் சோர் மாடத்து
எழுது அணி கடவுள் போகலின், புல்லென்று . . . .
ஒழுகுபலி மறந்த மெழுகாப் புன் திணைப்
பால் நாய் துள்ளிய பறைக்கட் சிற்றில்,
குயில் காழ் சிதைய மண்டி, அயில் வாய்க்
கூர் முகச் சிதலை வேய்ந்த
போர் மடி நல் இறைப் பொதியிலானே? . . . .
மணிமிடைபவளம்