பாடல் 2043
மதுரைத் தமிழ்க் கூத்தன் நாகன் தேவனார்
கதிர் கையாக வாங்கி, ஞாயிறு
பைது அறத் தெறுதலின், பயம் கரந்து மாறி,
விடுவாய்ப்பட்ட வியன் கண் மா நிலம்
காடு கவின் எதிரக் கனை பெயல் பொழிதலின்;
பொறி வரி இன வண்டு ஆர்ப்ப, பல உடன் . . . .
நறு வீ முல்லையொடு தோன்றி தோன்ற.
வெறி ஏன்றன்றே வீ கமழ் கானம்,
'எவன்கொல் மற்று அவர் நிலை?' என மயங்கி,
இகு பனி உறைக்கும் கண்ணொடு இனைபு, ஆங்கு
இன்னாது உறைவி தொல் நலம் பெறூஉம் . . . .
இது நற் காலம்; கண்டிசின் பகைவர்
மதில் முகம் முருக்கிய தொடி சிதை மருப்பின்,
கந்து கால் ஒசிக்கும் யானை,
வெஞ் சின வேந்தன் வினை விடப்பெறினே!
மணிமிடைபவளம்