நூல்கள்›அகநானூறு›பாடல் 2039

பாடல் 2039

குமுழி ஞாழலார் நப்பசலையார்

ஒடுங்கு ஈர் ஓதி நினக்கும் அற்றோ?

நடுங்கின்று, அளித்து, என் நிறை இல் நெஞ்சம்.

அடும்பு கொடி சிதைய வாங்கி, கொடுங் கழிக்

குப்பை வெண் மணல் பக்கம் சேர்த்தி,

நிறைச் சூல் யாமை மறைத்து ஈன்று, புதைத்த . . . .

கோட்டு வட்டு உருவின் புலவு நாறு முட்டை

பார்ப்பு இடன் ஆகும் அளவை, பகுவாய்க்

கணவன் ஓம்பும் கானல்அம் சேர்ப்பன்,

முள் உறின் சிறத்தல் அஞ்சி, மெல்ல

வாவு உடைமையின் வள்பின் காட்டி, . . . .

ஏத் தொழில் நவின்ற எழில் நடைப் புரவி

செழு நீர்த் தண் கழி நீந்தலின், ஆழி

நுதிமுகம் குறைந்த பொதி முகிழ் நெய்தல்,

பாம்பு உயர் தலையின், சாம்புவன நிவப்ப,

இரவந் தன்றால் திண் தேர், கரவாது . . . .

ஒல்லென ஒலிக்கும் இளையரொடு வல் வாய்

அரவச் சீறூர் காணப்,

பகல் வந்தன்றால், பாய்பரி சிறந்தே.

மணிமிடைபவளம்

← பாடல் 2038பாடல் 2040 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்