பாடல் 2038
ஆமூர்க் கவுதமன் சாதேவனார்
தெண் கழி விளைந்த வெண் கல் உப்பின்
கொள்ளை சாற்றிய கொடு நுக ஒழுகை
உரனுடைச் சுவல பகடு பல பரப்பி
உமண் உயிர்த்து இறந்த ஒழிகல் அடுப்பின்,
வடி உறு பகழிக் கொடு வில் ஆடவர் . . . .
அணங்குடை நோன் சிலை வணங்க வாங்கி,
பல் ஆன் நெடு நிரை தழீஇ, கல் என
அரு முனை அலைத்த பெரும் புகல் வலத்தர்,
கனை குரல் கடுந் துடிப் பாணி தூங்கி,
உவலைக் கண்ணியர், ஊன் புழுக்கு அயரும் . . . .
கவலை, 'காதலர் இறந்தனர்' என, நனி
அவலம் கொள்ளல்மா, காதல் அம் தோழி!
விசும்பின் நல் ஏறு சிலைக்கும் சேண் சிமை
நறும் பூஞ் சாரல் குறும் பொறைக் குணாஅது
வில் கெழு தடக்கை வெல் போர் வானவன் . . . .
மிஞிறு மூசு கவுள சிறு கண் யானைத்
தொடியுடைத் தட மருப்பு ஒடிய நூறி,
கொடுமுடி காக்கும் குரூஉக்கண் நெடு மதில்
சேண் விளங்கு சிறப்பின் ஆமூர் எய்தினும்,
ஆண்டு அமைந்து உறையுநர்அல்லர், நின் . . . .
பூண் தாங்கு ஆகம் பொருந்துதல் மறந்தே.
மணிமிடைபவளம்