பாடல் 2031
பரணர்
நெஞ்சு நடுங்கு அரும் படர் தீர வந்து,
குன்றுஉழை நண்ணிய சீறூர் ஆங்கண்
செலீஇய பெயர்வோள் வணர் சுரி ஐம்பால்
நுண் கோல் அகவுநர்ப் புரந்த பேர் இசை,
சினம் கெழு தானை, தித்தன் வெளியன், . . . .
இரங்குநீர்ப் பரப்பின் கானல்அம் பெருந் துறை,
தனம் தரு நன் கலம் சிதையத் தாக்கும்
சிறு வெள் இறவின் குப்பை அன்ன
உறு பகை தரூஉம் மொய்ம் மூசு பிண்டன்
முனை முரண் உடையக் கடந்த வென் வேல், . . . .
இசை நல் ஈகைக் களிறு வீசு வண் மகிழ்,
பாரத்துத் தலைவன், ஆர நன்னன்;
ஏழில் நெடு வரைப் பாழிச் சிலம்பில்
களி மயில் கலாவத்து அன்ன; தோளே
வல் வில் இளையர் பெருமகன்; நள்ளி . . . .
சோலை அடுக்கத்துச் சுரும்பு உண விரிந்த
கடவுள் காந்தளுள்ளும், பல உடன்
இறும்பூது கஞலிய ஆய்மலர் நாறி,
வல்லினும், வல்லார் ஆயினும், சென்றோர்க்குச்
சால் அவிழ் நெடுங் குழி நிறைய வீசும், . . . .
மாஅல் யானை ஆஅய் கானத்துத்
தலையாற்று நிலைஇய சேய் உயர் பிறங்கல்
வேய் அமைக் கண் இடை புரைஇ,
சேய ஆயினும், நடுங்கு துயர் தருமே.
மணிமிடைபவளம்