பாடல் 2024
கயமனார்
வேர் முழுது உலறி நின்ற புழல்கால்,
தேர் மணி இசையின் சிள்வீடு ஆர்க்கும்,
வற்றல் மரத்த பொன் தலை ஓதி
வெயிற் கவின் இழந்த வைப்பின் பையுள் கொள,
நுண்ணிதின் நிவக்கும் வெண் ஞெமை வியன் காட்டு . . . .
ஆள் இல் அத்தத்து, அளியள் அவனொடு
வாள்வரி பொருத புண் கூர் யானை
புகர் சிதை முகத்த குருதி வார,
உயர் சிமை நெடுங் கோட்டு உரும் என முழங்கும்
'அருஞ் சுரம் இறந்தனள்' என்ப பெருஞ் சீர் . . . .
அன்னி குறுக்கைப் பறந்தலை, திதியன்
தொல் நிலை முழு முதல் துமியப் பண்ணிய
நன்னர் மெல் இணர்ப் புன்னை போல,
கடு நவைப் படீஇயர் மாதோ - களி மயில்
குஞ்சரக் குரல குருகோடு ஆலும், . . . .
துஞ்சா முழவின், துய்த்து இயல் வாழ்க்கை,
கூழுடைத் தந்தை இடனுடை வரைப்பின்,
ஊழ் அடி ஒதுங்கினும் உயங்கும் ஐம் பால்
சிறு பல் கூந்தல் போது பிடித்து அருளாது,
எறி கோல் சிதைய நூறவும் சிறுபுறம், . . . .
'எனக்கு உரித்து' என்னாள், நின்ற என்
அமர்க் கண் அஞ்ஞையை அலைத்த கையே!
மணிமிடைபவளம்