பாடல் 2023
மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார்
"வருதும்" என்ற நாளும் பொய்த்தன;
அரி ஏர் உண்கண் நீரும் நில்லா;
தண் கார்க்கு ஈன்ற பைங் கொடி முல்லை
வை வாய் வால் முகை அவிழ்ந்த கோதை
பெய் வனப்பு இழந்த கதுப்பும் உள்ளார், . . . .
அருள் கண்மாறலோ மாறுக அந்தில்
அறன் அஞ்சலரே! ஆயிழை! நமர் எனச்
சிறிய சொல்லிப் பெரிய புலப்பினும்,
பனி படு நறுந் தார் குழைய, நம்மொடு,
துனி தீர் முயக்கம் பெற்றோள் போல . . . .
உவக்குநள் வாழிய, நெஞ்சே! விசும்பின்
ஏறு எழுந்து முழங்கினும் மாறு எழுந்து சிலைக்கும்
கடாஅ யானை கொட்கும் பாசறை,
போர் வேட்டு எழுந்த மள்ளர் கையதை
கூர் வாள் குவிமுகம் சிதைய நூறி, . . . .
மான் அடி மருங்கில் பெயர்த்த குருதி
வான மீனின் வயின் வயின் இமைப்ப,
அமர் ஓர்த்து, அட்ட செல்வம்
தமர் விரைந்து உரைப்பக் கேட்கும் ஞான்றே.
மணிமிடைபவளம்