பாடல் 2022
ஆலம்பேரி சாத்தனார்
செய்வினை பிரிதல் எண்ணி, கைம்மிகக்
காடு கவின் ஒழியக் கடுங் கதிர் தெறுதலின்,
நீடு சினை வறிய ஆக, ஒல்லென
வாடு பல் அகல்இலை கோடைக்கு ஒய்யும்
தேக்கு அமல் அடுக்கத்து ஆங்கண் மேக்கு எழுபு, . . . .
முளி அரில் பிறந்த வளி வளர் கூர் எரிச்
சுடர் நிமிர் நெடுங் கொடி விடர் முகை முழங்கும்
'வெம் மலை அருஞ் சுரம் நீந்தி ஐய!
சேறும்' என்ற சிறு சொற்கு இவட்கே,
வசை இல் வெம் போர் வானவன் மறவன் . . . .
நசையின் வாழ்நர்க்கு நன் கலம் சுரக்கும்,
பொய்யா வாய்வாள், புனைகழல், பிட்டன்
மை தவழ் உயர் சிமைக் குதிரைக் கவாஅன்
அகல் அறை நெடுஞ் சுனை, துவலையின் மலர்ந்த
தண் கமழ் நீலம் போல, . . . .
கண் பனி கலுழ்ந்தன; நோகோ யானே.
மணிமிடைபவளம்