பாடல் 2021
பரணர்
இலமலர் அன்ன அம் செந் நாவின்
புலம் மீக்கூறும் புரையோர் ஏத்த,
பலர் மேந் தோன்றிய கவி கை வள்ளல்
நிறைஅருந் தானை வெல்போர் மாந்தரம்
பொறையன் கடுங்கோப் பாடிச் சென்ற . . . .
குறையோர் கொள்கலம் போல, நன்றும்
உவ இனி வாழிய, நெஞ்சே! காதலி
முறையின் வழாஅது ஆற்றிப் பெற்ற
கறை அடி யானை நன்னன் பாழி,
ஊட்டு அரு மரபின் அஞ்சு வரு பேஎய்க் . . . .
ஊட்டு எதிர்கொண்ட வாய் மொழி மிஞிலி
புள்ளிற்கு ஏமம் ஆகிய பெரும் பெயர்
வெள்ளத் தானை அதிகற் கொன்று, உவந்து
ஒள் வாள் அமலை ஆடிய ஞாட்பின்,
பலர் அறிவுறுதல் அஞ்சி, பைப்பைய, . . . .
நீர்த் திரள் கடுக்கும் மாசு இல் வெள்ளிச்
சூர்ப்புறு கோல் வளை செறித்த முன்கை
குறை அறல் அன்ன இரும் பல் கூந்தல்,
இடன் இல் சிறு புறத்து இழையொடு துயல்வர,
கடல் மீன் துஞ்சும் நள்ளென் யாமத்து, . . . .
உருவு கிளர் ஏர்வினைப் பொலிந்த பாவை
இயல் கற்றன்ன ஒதுக்கினள் வந்து,
பெயல் அலைக் கலங்கிய மலைப் பூங் கோதை
இயல் எறி பொன்னின் கொங்கு சோர்பு உறைப்ப,
தொடிக்கண் வடுக்கொள முயங்கினள்; . . . .
வடிப்பு உறு நரம்பின் தீவிய மொழிந்தே.
மணிமிடைபவளம்