பாடல் 2001
பரணர்
இரும் பிழி மாரி அழுங்கல் மூதூர்
விழவு இன்றுஆயினும் துஞ்சாது ஆகும்;
மல்லல் ஆவணம் மறுகு உடன் மடியின்,
வல் உரைக் கடுஞ் சொல் அன்னை துஞ்சாள்;
பிணி கோள் அருஞ் சிறை அன்னை துஞ்சின், . . . .
துஞ்சாக் கண்ணர் காவலர் கடுகுவர்;
இலங்குவேல் இளையர் துஞ்சின், வை எயிற்று
வலம் சுரித் தோகை ஞாளி மகிழும்;
அரவவாய் ஞமலி மகிழாது மடியின்,
பகல் உரு உறழ நிலவுக் கான்று விசும்பின் . . . .
அகல்வாய் மண்டிலம் நின்று விரியும்மே;
திங்கள் கல் சேர்பு கனை இருள் மடியின்,
இல் எலி வல்சி வல் வாய்க் கூகை
கழுது வழங்கு யாமத்து அழிதகக் குழறும்;
வளைக்கண் சேவல் வாளாது மடியின், . . . .
மனைச் செறி கோழி மாண் குரல் இயம்பும்;
எல்லாம் மடிந்த காலை, ஒரு நாள்
நில்லா நெஞ்சத்து அவர் வாரலரே; அதனால்,
அரி பெய் புட்டில் ஆர்ப்பப் பரி சிறந்து,
ஆதி போகிய பாய்பரி நன் மான் . . . .
நொச்சி வேலித் தித்தன் உறந்தைக்
கல் முதிர் புறங்காட்டு அன்ன
பல் முட்டின்றால் தோழி! நம் களவே.
மணிமிடைபவளம்