பாடல் 1998
குடவாயிற் கீரத்தனார்
'நுதலும் தோளும், திதலை அல்குலும்,
வண்ணமும், வனப்பும், வரியும், வாட
வருந்துவள், இவள்' எனத் திருந்துபு நோக்கி,
'வரைவு நன்று' என்னாது அகலினும், அவர் வறிது,
ஆறு செல் மாக்கள் அறுத்த பிரண்டை . . . .
ஏறு பெறு பாம்பின் பைந் துணி கடுப்ப,
நெறி அயல் திரங்கும் அத்தம், வெறி கொள,
உமண் சாத்து இறந்த ஒழி கல் அடுப்பில்
நோன் சிலை மழவர் ஊன் புழுக்கு அயரும்
சுரன் வழக்கு அற்றது என்னாது, உரம் சிறந்து . . . .
நெய்தல் உருவின் ஐது இலங்கு அகல் இலை,
தொடை அமை பீலிப் பொலிந்த கடிகை,
மடை அமை திண் சுரை, மாக் காழ் வேலொடு
தணி அமர் அழுவம் தம்மொடு துணைப்ப,
துணிகுவர்கொல்லோ தாமே துணிகொள . . . .
மறப் புலி உழந்த வசி படு சென்னி
உறுநோய் வருத்தமொடு உணீஇய மண்டி,
படி முழம் ஊன்றிய நெடு நல் யானை
கை தோய்த்து உயிர்க்கும் வறுஞ் சுனை,
மை தோய் சிமைய, மலைமுதல் ஆறே? . . . .
களிற்றியானை நிரை