நூல்கள்›அகநானூறு›பாடல் 1989

பாடல் 1989

போந்தைப் பசலையார்

அன்னை அறியினும் அறிக; அலர்வாய்

அம் மென் சேரி கேட்பினும் கேட்க;

பிறிது ஒன்று இன்மை அறியக் கூறி,

கொடுஞ் சுழிப் புகாஅர்த் தெய்வம் நோக்கி,

கடுஞ் சூள் தருகுவன், நினக்கே; கானல் . . . .

தொடலை ஆயமொடு கடல் உடன் ஆடியும்,

சிற்றில் இழைத்தும், சிறு சோறு குவைஇயும்,

வருந்திய வருத்தம் தீர, யாம் சிறிது

இருந்தனமாக, எய்த வந்து,

'தட மென் பணைத் தோள் மட நல்லீரே! . . . .

எல்லும் எல்லின்று; அசைவு மிக உடையேன்;

மெல் இலைப் பரப்பின் விருந்து உண்டு, யானும் இக்

கல்லென் சிறுகுடித் தங்கின் மற்று எவனோ?'

என மொழிந்தனனே, ஒருவன். அவற் கண்டு,

இறைஞ்சிய முகத்தெம் புறம் சேர்பு பொருந்தி . . . .

'இவை நுமக்கு உரிய அல்ல; இழிந்த

கொழு மீன் வல்சி' என்றனம், இழுமென

'நெடுங் கொடி நுடங்கும் நாவாய் தோன்றுவ

காணாமோ?' எனக் காலின் சிதையா,

நில்லாது பெயர்ந்த பல்லோருள்ளும் . . . .

என்னே குறித்த நோக்கமொடு, 'நன்னுதால்!

ஒழிகோ யான்?' என அழிதகக் கூறி,

யான் 'பெயர்க' என்ன, நோக்கி, தான் தன்

நெடுந் தேர்க் கொடிஞ்சி பற்றி

நின்றோன் போலும் என்றும் என் மகட்கே . . . .

களிற்றியானை நிரை

← பாடல் 1988பாடல் 1990 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்