நூல்கள்›அகநானூறு›பாடல் 1945

பாடல் 1945

செல்லூர்க் கோசிகன் கண்ணனார்

'இம்மை உலகத்து இசையொடும் விளங்கி,

மறுமை உலகமும் மறு இன்று எய்துப,

செறுநரும் விழையும் செயிர் தீர் காட்சிச்

சிறுவர்ப் பயந்த செம்மலோர்' எனப்

பல்லோர் கூறிய பழமொழி எல்லாம் . . . .

வாயே ஆகுதல் வாய்த்தனம் - தோழி!

நிரை தார் மார்பன் நெருநல் ஒருத்தியொடு

வதுவை அயர்தல் வேண்டி, புதுவதின்

இயன்ற அணியன், இத் தெரு இறப்போன்

மாண் தொழில் மா மணி கறங்க, கடை கழிந்து . . . .

காண்டல் விருப்பொடு தளர்பு தளர்பு ஓடும்

பூங் கண் புதல்வனை நோக்கி, 'நெடுந் தேர்

தாங்குமதி, வலவ!' என்று இழிந்தனன்; தாங்காது,

மணி புரை செவ் வாய் மார்பகம் சிவணப்

புல்லி, 'பெரும! செல் இனி, அகத்து' எனக் . . . .

கொடுப்போற்கு ஒல்லான் கலுழ்தலின், 'தடுத்த

மாநிதிக் கிழவனும் போன்ம்' என, மகனொடு

தானே புகுதந்தோனே; யான் அது

படுத்தனென் ஆகுதல் நாணி, இடித்து, 'இவற்

கலக்கினன் போலும், இக் கொடியோன்' எனச் சென்று . . . .

அலைக்கும் கோலொடு குறுக, தலைக்கொண்டு

இமிழ் கண் முழவின் இன் சீர் அவர் மனைப்

பயிர்வன போல வந்து இசைப்பவும், தவிரான்,

கழங்கு ஆடு ஆயத்து அன்று நம் அருளிய

பழங் கண்ணோட்டமும் நலிய . . . .

அழுங்கினன்அல்லனோ, அயர்ந்த தன் மணனே!

களிற்றியானை நிரை

← பாடல் 1944பாடல் 1946 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்