நூல்கள்›அகநானூறு›பாடல் 1903

பாடல் 1903

ஆவூர் மூலங் கிழார்

வேளாப் பார்ப்பான் வாளரந் துமித்த

வளை களைந்து ஒழிந்த கொழுந்தின் அன்ன,

தலை பிணி அவிழா, சுரி முகப் பகன்றை,

சிதரல் அம் துவலை தூவலின், மலரும்

தைஇ நின்ற தண் பெயல் கடைநாள் . . . .

வயங்கு கதிர் கரந்த வாடை வைகறை,

விசும்பு உரிவதுபோல், வியல் இடத்து ஒழுகி,

மங்குல் மா மழை, தென் புலம் படரும்

பனி இருங் கங்குலும் தமியள் நீந்தி,

தம் ஊரோளே, நன்னுதல்; யாமே . . . .

கடி மதில் கதவம் பாய்தலின், தொடி பிளந்து,

நுதி முகம் மழுகிய மண்ணை வெண் கோட்டு,

சிறு கண் யானை நெடு நா ஒண் மணி,

கழிப் பிணிக் கறைத் தோல் பொழி கணை உதைப்பு,

தழங்குகுரல் முரசமொடு முழங்கும் யாமத்து . . . .

கழித்து உறை செறியா வாளுடை எறுழ்த் தோள்,

இரவுத் துயில் மடிந்த தானை,

உரவுச் சின வேந்தன் பாசறையேமே!

களிற்றியானை நிரை

← பாடல் 1902பாடல் 1904 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்