பாடல் 1898
பொருந்தில் இளங்கீரனார்
அன்று அவண் ஒழிந்தன்றும் இலையே; வந்து நனி
வருந்தினை வாழி, என் நெஞ்சே! பருந்து இருந்து
உயா விளி பயிற்றும், யா உயர், நனந்தலை,
உருள் துடி மகுளியின் பொருள் தெரிந்து இசைக்கும்
கடுங் குரற் குடிஞைய நெடும் பெருங் குன்றம் . . . .
எம்மொடு இறத்தலும்செல்லாய்; பின் நின்று,
ஒழியச் சூழ்ந்தனை ஆயின், தவிராது,
செல் இனி; சிறக்க, நின் உள்ளம்! வல்லே
மறவல் ஓம்புமதி, எம்மே நறவின்
சேயிதழ் அனைய ஆகி, குவளை . . . .
மா இதழ் புரையும் மலிர் கொள் ஈர் இமை,
உள்ளகம் கனல உள்ளுதொறு உலறி,
பழங்கண் கொண்ட, கலிழ்ந்து வீழ், அவிர் அறல்
வெய்ய உகுதர, வெரீஇ, பையென,
சில் வளை சொரிந்த மெல் இறை முன்கை . . . .
பூவிழ் கொடியின் புல்லெனப் போகி,
அடர்செய் ஆய் அகல் சுடர் துணை ஆக,
இயங்காது வதிந்த நம் காதலி
உயங்கு சாய் சிறுபுறம் முயங்கிய பின்னே!
களிற்றியானை நிரை