நூல்கள்›அகநானூறு›பாடல் 1884

பாடல் 1884

பாலை பாடிய பெருங்கடுங்கோ

அளி நிலை பொறாஅது அமரிய முகத்தள்,

விளி நிலை கொள்ளாள், தமியள், மென்மெல,

நலம் மிகு சேவடி நிலம் வடுக் கொளாஅ,

குறுக வந்து, தன் கூர் எயிறு தோன்ற

வறிது அகத்து எழுந்த வாய் அல் முறுவலள் . . . .

கண்ணியது உணரா அளவை, ஒண்ணுதல்,

வினை தலைப்படுதல் செல்லா நினைவுடன்

முளிந்த ஓமை முதையல்அம் காட்டு,

பளிங்கத்து அன்ன பல் காய் நெல்லி,

மோட்டு இரும் பாறை, ஈட்டு வட்டு ஏய்ப்ப . . . .

உதிர்வன படூஉம் கதிர் தெறு கவாஅன்,

மாய்த்த போல மழுகு நுனை தோற்றி,

பாத்தியன்ன குடுமிக் கூர்ங் கல்,

விரல் நுதி சிதைக்கும் நிரை நிலை அதர,

பரல் முரம்பு ஆகிய பயம் இல், கானம் . . . .

இறப்ப எண்ணுதிர் ஆயின் "அறத்தாறு

அன்று" என மொழிந்த தொன்றுபடு கிளவி

அன்ன ஆக' என்னுநள் போல,

முன்னம் காட்டி, முகத்தின் உரையா,

ஓவச் செய்தியின் ஒன்று நினைந்து ஒற்றி . . . .

பாவை மாய்த்த பனிநீர் நோக்கமொடு,

ஆகத்து ஒடுக்கிய புதல்வன் புன் தலைத்

தூ நீர் பயந்த துணை அமை பிணையல்

மோயினள் உயிர்த்த காலை, மா மலர்

மணி உரு இழந்த அணி அழி தோற்றம் . . . .

கண்டே கடிந்தனம், செலவே ஒண்டொடி

உழையம் ஆகவும் இனைவோள்

பிழையலள் மாதோ, பிரிதும் நாம் எனினே!

களிற்றியானை நிரை

← பாடல் 1883பாடல் 1885 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்