பாடல் 1874
'துனையுநர் விழை தக்க சிறப்புப்போல், கண்டார்க்கு
நனவினுள் உதவாது நள்ளிருள் வேறாகும்
கனவின் நிலையின்றால், காமம்; ஒருத்தி
உயிர்க்கும்; உசாஅம்; உலம்வரும்; ஓவாள்,
கயல் புரை உண்கண் அரிப்ப அரி வார, . . . .
பெயல் சேர் மதி போல, வாள் முகம் தோன்ற,
பல ஒலி கூந்தலாள், பண்பு எல்லாம் துய்த்துத்
துறந்தானை உள்ளி, அழூஉம்; அவனை
மறந்தாள்போல் ஆலி நகூஉம்; மருளும்;
சிறந்த தன் நாணும் நலனும் நினையாது, . . . .
காமம் முனைஇயாள், அலந்தாள்' என்று, எனைக் காண,
நகான்மின்; கூறுவேன், மாக்காள்! மிகாஅது,
மகளிர் தோள் சேர்ந்த மாந்தர் துயர் கூர நீத்தலும்,
நீள் சுரம் போகியார் வல்லை வந்து அளித்தலும்,
ஊழ் செய்து, இரவும் பகலும்போல், வேறாகி, . . . .
வீழ்வார்கண் தோன்றும்; தடுமாற்றம் ஞாலத்துள்
வாழ்வார்கட்கு எல்லாம் வரும்;
தாழ்பு, துறந்து, தொடி நெகிழ்த்தான் போகிய கானம்
இறந்து எரி நையாமல், பாஅய் முழங்கி
வறந்து என்னை செய்தியோ,வானம்? சிறந்த என் . . . .
கண்ணீர்க் கடலால், கனை துளி வீசாயோ,
கொண்மூக் குழீஇ முகந்து;
நுமக்கு எவன் போலுமோ? ஊரீர்! எமக்கும் எம்
கண்பாயல் கொண்டு, உள்ளாக் காதலவன் செய்த
பண்பு தர வந்த என் தொடர் நோய் வேது . . . .
கொள்வது போலும், கடும் பகல்? ஞாயிறே!
எல்லாக் கதிரும் பரப்பி, பகலொடு
செல்லாது நின்றீயல் வேண்டுவல்; நீ செல்லின்,
புல்லென் மருள் மாலைப் போழ்து இன்று வந்து என்னைக்
கொல்லாது போதல் அரிதால்; அதனொடு யான் . . . .
செல்லாது நிற்றல் இலேன்;
ஒல்லை எம் காதலர்க் கொண்டு, கடல் ஊர்ந்து, காலைநாள்,
போதரின் காண்குவேன்மன்னோ பனியொடு
மாலைப் பகை தாங்கி, யான்;
இனியன் என்று ஓம்படுப்பல், ஞாயிறு! இனி . . . .
ஒள் வளை ஓடத் துறந்து, துயர் செய்த
கள்வன்பால் பட்டன்று, ஒளித்து என்னை, உள்ளி
பெருங் கடல் புல்லென, கானல் புலம்ப,
இருங் கழி நெய்தல் இதழ் பொதிந்து தோன்ற,
விரிந்து இலங்கு வெண் நிலா வீசும் பொழுதினான், . . . .
யான் வேண்டு ஒருவன், என் அல்லல் உறீஇயான்;
தான் வேண்டுபவரோடு துஞ்சும்கொல், துஞ்சாது?
வானும், நிலனும், திசையும், துழாவும் என்
ஆனாப் படர் மிக்க நெஞ்சு
ஊரவர்க்கு எல்லாம் பெரு நகை ஆகி, என் . . . .
ஆர் உயிர் எஞ்சும்மன்; அங்கு நீ சென்றீ
நிலவு உமிழ் வான் திங்காள்! ஆய் தொடி கொட்ப,
அளி புறம் மாறி, அருளான் துறந்த அக்
காதலன் செய்த கலக்குறு நோய்க்கு ஏதிலார்
எல்லாரும் தேற்றர், மருந்து; . . . .
வினைக் கொண்டு என் காம நோய் நீக்கிய ஊரீர்!
எனைத்தானும் எள்ளினும், எள்ளலன், கேள்வன்;
நினைப்பினும், கண்ணுள்ளே தோன்றும்; அனைத்தற்கே
ஏமராது, ஏமரா ஆறு;
கனை இருள் வானம்! கடல் முகந்து, என்மேல் . . . .
உறையொடு நின்றீயல் வேண்டும், ஒருங்கே
நிறை வளை கொட்பித்தான் செய்த துயரால்
இறை இறை பொத்திற்றுத் தீ;
எனப் பாடி,
நோயுடை நெஞ்சத்து எறியா, இனைபு ஏங்கி, . . . .
'யாவிரும் எம் கேள்வற் காணீரோ?' என்பவட்கு,
ஆர்வுற்ற பூசற்கு அறம்போல, ஏய்தந்தார்;
பாயல் கொண்டு உள்ளாதவரை வரக் கண்டு,
மாயவன் மார்பில் திருப்போல் அவள் சேர,
ஞாயிற்று முன்னர் இருள்போல மாய்ந்தது என் . . . .
ஆயிழை உற்ற துயர்
நெய்தற் கலி