நூல்கள்›கலித்தொகை›பாடல் 1869

பாடல் 1869

கண்டவிர் எல்லாம் கதுமென வந்து, ஆங்கே,

பண்டு அறியாதீர் போல நோக்குவீர்; கொண்டது

மா என்று உணர்மின்; மடல் அன்று; மற்று இவை

பூ அல்ல; பூளை, உழிஞையோடு, யாத்த

புன வரை இட்ட வயங்கு தார்ப் பீலி, . . . .

பிடி அமை நூலொடு பெய்ம் மணி கட்டி,

அடர் பொன் அவிர் ஏய்க்கும் ஆவிரங் கண்ணி:

நெடியோன் மகன் நயந்து தந்து, ஆங்கு அனைய

வடிய வடிந்த வனப்பின், என் நெஞ்சம்

இடிய இடைக் கொள்ளும் சாயல், ஒருத்திக்கு . . . .

அடியுறை காட்டிய செல்வேன்; மடியன்மின்;

அன்னேன் ஒருவனேன், யான்;

என்னானும், 'பாடு' எனில், பாடவும் வல்லேன், சிறிது; ஆங்கே,

'ஆடு' எனில், ஆடலும் ஆற்றுகேன்; பாடுகோ

என் உள் இடும்பை தணிக்கும் மருந்தாக, . . . .

நன்னுதல் ஈத்த இம் மா?

திங்கள் அரவு உறின், தீர்க்கலார் ஆயினும்,

தம் காதல் காட்டுவர், சான்றவர் இன் சாயல்

ஒண்டொடி நோய் நோக்கில் பட்ட என் நெஞ்ச நோய்

கண்டும், கண்ணோடாது, இவ் ஊர் . . . .

தாங்காச் சினத்தொடு காட்டி உயிர் செகுக்கும்

பாம்பும் அவைப் படில், உய்யுமாம் பூங் கண்

வணர்ந்து ஒலி ஐம்பாலாள் செய்த இக் காமம்

உணர்ந்தும், உணராது, இவ் ஊர்

வெஞ் சுழிப் பட்ட மகற்குக் கரை நின்றார் . . . .

அஞ்சல் என்றாலும் உயிர்ப்பு உண்டாம் அம் சீர்ச்

செறிந்த ஏர் முறுவலாள் செய்த இக் காமம்

அறிந்தும், அறியாது, இவ் ஊர்

ஆங்க,

என் கண் இடும்பை அறீஇயினென்; நும்கண் . . . .

தெருளுற நோக்கித் தெரியுங்கால், இன்ன

மருளுறு நோயொடு மம்மர் அகல,

இருளுறு கூந்தலாள் என்னை

அருளுறச் செயின், நுமக்கு அறனுமார் அதுவே.

நெய்தற் கலி

← பாடல் 1868பாடல் 1870 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்