நூல்கள்›கலித்தொகை›பாடல் 1868

பாடல் 1868

சான்றவிர், வாழியோ! சான்றவிர்! என்றும்

பிறர் நோயும் தம் நோய் போல் போற்றி, அறன் அறிதல்

சான்றவர்க்கு எல்லாம் கடன் ஆனால், இவ் இருந்த

சான்றீர்! உமக்கு ஒன்று அறிவுறுப்பேன்: மான்ற

துளி இடை மின்னுப் போல் தோன்றி, ஒருத்தி, . . . .

ஒளியோடு உரு என்னைக் காட்டி, அளியள், என்

நெஞ்சு ஆறு கொண்டாள்; அதற்கொண்டும் துஞ்சேன்,

அணி அலங்கு ஆவிரைப் பூவோடு எருக்கின்

பிணையல் அம் கண்ணி மிலைந்து, மணி ஆர்ப்ப,

ஓங்கு இரும் பெண்ணை மடல் ஊர்ந்து, என் எவ்வ நோய் . . . .

தாங்குதல் தேற்றா இடும்பைக்கு உயிர்ப்பாக

வீங்கு இழை மாதர் திறத்து ஒன்று, நீங்காது,

பாடுவேன், பாய் மா நிறுத்து;

யாமத்தும் எல்லையும் எவ்வத் திரை அலைப்ப,

'மா மேலேன்' என்று, மடல் புணையா நீந்துவேன் . . . .

தே மொழி மாதர் உறாஅது உறீஇய

காமக் கடல் அகப்பட்டு;

உய்யா அரு நோய்க்கு உயவாகும் மையல்

உறீஇயாள் ஈத்த இம் மா;

காணுநர் எள்ளக் கலங்கி, தலை வந்து, என் . . . .

ஆண் எழில் முற்றி உடைத்து உள் அழித்தரும்

'மாண் இழை மாதராள் ஏஎர்' என, காமனது

ஆணையால் வந்த படை;

காமக் கடும் பகையின் தோன்றினேற்கு ஏமம்

எழிநுதல் ஈத்த இம் மா; . . . .

அகை எரி ஆனாது, என் ஆர் உயிர் எஞ்சும்

வகையினால், உள்ளம் சுடுதரும் மன்னோ

முகை ஏர் இலங்கு எயிற்று இன் நகை மாதர்

தகையால் தலைக்கொண்ட நெஞ்சு!

அழல் மன்ற, காம அரு நோய்; நிழல் மன்ற, . . . .

நேரிழை ஈத்த இம் மா;

ஆங்கு அதை,

அறிந்தனிர் ஆயின், சான்றவிர்! தான் தவம்

ஒரீஇ, துறக்கத்தின் வழீஇ, ஆன்றோர்

உள் இடப்பட்ட அரசனைப் பெயர்த்து, அவர் . . . .

உயர்நிலை உலகம் உறீஇயாங்கு, என்

துயர் நிலை தீர்த்தல் நும்தலைக் கடனே.

நெய்தற் கலி

← பாடல் 1867பாடல் 1869 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்