பாடல் 1858
தொல் ஊழி தடுமாறி, தொகல் வேண்டும் பருவத்தால்,
பல் வயின் உயிர் எல்லாம் படைத்தான்கண் பெயர்ப்பான் போல்,
எல் உறு தெறு கதிர் மடங்கி, தன் கதிர் மாய;
நல் அற நெறி நிறீஇ உலகு ஆண்ட அரசன் பின்,
அல்லது மலைந்திருந்து அற நெறி நிறுக்கல்லா . . . .
மெல்லியான் பருவம் போல், மயங்கு இருள் தலை வர;
எல்லைக்கு வரம்பு ஆய, இடும்பை கூர், மருள் மாலை;
பாய் திரைப் பாடு ஓவாப் பரப்பு நீர்ப் பனிக் கடல்!
'தூ அறத் துறந்தனன் துறைவன்' என்று, அவன் திறம்
நோய் தெற உழப்பார்கண் இமிழ்தியோ? எம் போலக் . . . .
காதல் செய்து அகன்றாரை உடையையோ? நீ
மன்று இரும் பெண்ணை மடல் சேர் அன்றில்!
'நன்று அறை கொன்றனர், அவர்' எனக் கலங்கிய
என் துயர் அறிந்தனை நரறியோ? எம் போல
இன் துணைப் பிரிந்தாரை உடையையோ? நீ . . . .
பனி இருள் சூழ்தர பைதல் அம் சிறு குழல்!
'இனி வரின், உயரும்மன் பழி' எனக் கலங்கிய
தனியவர் இடும்பை கண்டு இனைதியோ? எம் போல
இனிய செய்து அகன்றாரை உடையையோ? நீ
என ஆங்கு, . . . .
அழிந்து, அயல் அறிந்த எவ்வம் மேற்பட,
பெரும் பேதுறுதல் களைமதி, பெரும!
வருந்திய செல்லல் தீர்த்த திறன் அறி ஒருவன்
மருந்து அறைகோடலின் கொடிதே, யாழ நின்
அருந்தியோர் நெஞ்சம் அழிந்து உக விடினே. . . . .
நெய்தற் கலி