நூல்கள்›கலித்தொகை›பாடல் 1840

பாடல் 1840

தீம் பால் கறந்த கலம் மாற்றி, கன்று எல்லாம்

தாம்பின் பிணித்து, மனை நிறீஇ, யாய் தந்த

பூங் கரை நீலம் புடை தாழ மெய் அசைஇ, பாங்கரும்

முல்லையும் தாய பாட்டங்கால் தோழி! நம்

புல்லினத்து ஆயர் மகளிரோடு எல்லாம் . . . .

ஒருங்கு விளையாட, அவ் வழி வந்த

குருந்தம்பூங் கண்ணிப் பொதுவன், மற்று என்னை,

'முற்று இழை ஏஎர் மட நல்லாய்! நீ ஆடும்

சிற்றில் புனைகோ, சிறிது?' என்றான்; எல்லா! நீ,

"பெற்றேம் யாம்" என்று, பிறர் செய்த இல் இருப்பாய்; . . . .

கற்றது இலை மன்ற காண்' என்றேன். 'முற்றிழாய்!

தாது சூழ் கூந்தல் தகை பெறத் தைஇய

கோதை புனைகோ, நினக்கு?' என்றான்; 'எல்லா! நீ

ஏதிலார் தந்த பூக் கொள்வாய்; நனி மிகப்

பேதையை மன்ற பெரிது' என்றேன். 'மாதராய்! . . . .

ஐய பிதிர்ந்த சுணங்கு அணி மென் முலைமேல்

தொய்யில் எழுதுகோ மற்று?' என்றான்; 'யாம் பிறர்

செய் புறம் நோக்கி இருத்துமோ? நீ பெரிது

மையலைமாதோ; விடுக!' என்றேன். தையலாய்!

சொல்லிய ஆறு எல்லாம் மாறு மாறு யான் பெயர்ப்ப, . . . .

அல்லாந்தான் போலப் பெயர்ந்தான்; அவனை நீ

ஆயர் மகளிர் இயல்பு உரைத்து, எந்தையும்

யாயும் அறிய உரைத்தீயின், யான் உற்ற

நோயும் களைகுவைமன்.

முல்லைக் கலி

← பாடல் 1839பாடல் 1841 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்