நூல்கள்›கலித்தொகை›பாடல் 1825

பாடல் 1825

'ஏந்து எழில் மார்ப! எதிர் அல்ல, நின் வாய்ச் சொல்;

பாய்ந்து ஆய்ந்த தானைப் பரிந்து ஆனா மைந்தினை;

சாந்து அழி வேரை; சுவல் தாழ்ந்த கண்ணியை;

யாங்குச் சென்று, ஈங்கு வந்தீத்தந்தாய்?' 'கேள் இனி:

ஏந்தி எதிர் இதழ் நீலம் பிணைந்தன்ன கண்ணாய்! . . . .

குதிரை வழங்கி வருவல்'

அறிந்தேன், குதிரைதான்;

பால் பிரியா ஐங்கூந்தற் பல் மயிர்க் கொய் சுவல்,

மேல் விரித்து யாத்த சிகழிகைச் செவ் உளை,

நீல மணிக் கடிகை வல்லிகை, யாப்பின் கீழ் . . . .

ஞால் இயல் மென் காதின் புல்லிகைச் சாமரை,

மத்திகைக் கண்ணுறையாகக் கவின் பெற்ற

உத்தி ஒரு காழ், நூல் உத்தரியத் திண் பிடி,

நேர் மணி நேர் முக்காழ்ப் பல்பல கண்டிகை,

தார் மணி பூண்ட தமனிய மேகலை, . . . .

நூபுரப் புட்டில், அடியொடு அமைத்து யாத்த

வார் பொலம் கிண்கிணி, ஆர்ப்ப இயற்றி, நீ

காதலித்து ஊர்ந்த நின் காமக் குதிரையை,

ஆய் சுதை மாடத்து அணி நிலா முற்றத்துள்,

ஆதிக் கொளீஇ, அசையினை ஆகுவை, . . . .

வாதுவன்; வாழிய, நீ!

சேகா! கதிர் விரி வைகலில், கை வாரூஉக் கொண்ட

மதுரைப் பெரு முற்றம் போல, நின் மெய்க்கண்

குதிரையோ, வீறியது;

கூர் உகிர் மாண்ட குளம்பினது; நன்றே . . . .

கோரமே வாழி! குதிரை;

வெதிர் உழக்கு நாழியால் சேதிகைக் குத்திக்

குதிரை உடல் அணி போல, நின் மெய்க்கண்

குதிரையோ, கவ்வியது;

சீத்தை! பயம் இன்றி ஈங்குக் கடித்தது; நன்றே . . . .

வியமே வாழி! குதிரை;

மிக நன்று, இனி அறிந்தேன், இன்று நீ ஊர்ந்த குதிரை;

பெரு மணம் பண்ணி, அறத்தினில் கொண்ட

பருமக் குதிரையோ அன்று; பெரும! நின்

ஏதில் பெரும் பாணன் தூது ஆட, ஆங்கே ஓர் . . . .

வாதத்தான் வந்த வளிக் குதிரை; ஆதி

உரு அழிக்கும், அக் குதிரை; ஊரல், நீ; ஊரின், பரத்தை

பரியாக, வாதுவனாய், என்றும் மற்று அச் சார்த்

திரி; குதிரை ஏறிய செல்.

மருதக் கலி

← பாடல் 1824பாடல் 1826 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்