நூல்கள்›கலித்தொகை›பாடல் 1824

பாடல் 1824

நில், ஆங்கு; நில், ஆங்கு; இவர்தரல் எல்லா! நீ

நாறு இருங் கூந்தலார் இல் செல்வாய், இவ் வழி,

ஆறு மயங்கினை போறி! நீ வந்தாங்கே

மாறு, இனி, நின் ஆங்கே, நின் சேவடி சிவப்ப

செறிந்து ஒளிர் வெண் பல்லாய்! யாம் வேறு இயைந்த . . . .

குறும்பூழ்ப் போர் கண்டேம்; அனைத்தல்லது, யாதும்

அறிந்ததோ இல்லை, நீ வேறு ஓர்ப்பது;

குறும்பூழ்ப் போர் கண்டமை கேட்டேன், நீ என்றும்;

புதுவன ஈகை வளம் பாடி, காலின்

பிரியாக் கவி கைப் புலையன் தன் யாழின் . . . .

இகுத்த செவி சாய்த்து, இனி இனிப் பட்டன

ஈகைப் போர் கண்டாயும் போறி; மெய் எண்ணின்,

தபுத்த புலர்வில் புண்;

ஊரவர் கவ்வை உளைந்தீயாய், அல்கல் நின்

தாரின்வாய்க் கொண்டு முயங்கி, பிடி மாண்டு, . . . .

போர் வாய்ப்பக் காணினும் போகாது கொண்டு, ஆடும்

பார்வைப் போர் கண்டாயும் போறி; நின் தோள் மேலாம்

ஈரமாய் விட்டன புண்;

கொடிற்றுப் புண் செய்யாது, மெய்ம் முழுதும் கையின்

துடைத்து, நீ வேண்டினும் வெல்லாது கொண்டு, ஆடும் . . . .

ஒட்டிய போர் கண்டாயும் போறி; முகம்தானே

கொட்டிக் கொடுக்கும் குறிப்பு;

ஆயின், ஆயிழாய்! அன்னவை யான் ஆங்கு அறியாமை

போற்றிய, நின் மெய் தொடுகு;

'அன்னையோ!' 'மெய்யைப் பொய் என்று மயங்கிய, கை ஒன்று . . . .

அறிகல்லாய் போறிகாண், நீ;

நல்லாய்! பொய் எல்லாம் ஏற்றி, தவறு தலைப்பெய்து,

கையொடு கண்டாய்; பிழைத்தேன்; அருள், இனி'

அருளுகம் யாம்; யாரேம், எல்லா! தெருள

அளித்து, நீ பண்ணிய பூழ் எல்லாம் இன்னும் . . . .

விளித்து, நின் பாணனோடு ஆடி அளித்தி

விடலை நீ நீத்தலின், நோய் பெரிது ஏய்க்கும்;

நடலைப்பட்டு, எல்லாம் நின் பூழ்.

மருதக் கலி

← பாடல் 1823பாடல் 1825 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்