நூல்கள்›கலித்தொகை›பாடல் 1823

பாடல் 1823

என் நோற்றனைகொல்லோ

நீருள் நிழல் போல் நுடங்கிய மென் சாயல்

ஈங்கு உருச் சுருங்கி

இயலுவாய்! நின்னோடு உசாவுவேன்; நின்றீத்தை;

அன்னையோ! காண் தகை இல்லாக் குறள் நாழிப் போழ்தினான், . . . .

ஆண்தலைக்கு ஈன்ற பறழ் மகனே நீ! எம்மை,

'வேண்டுவல்' என்று விஇலக்கினை; நின் போல்வார்

தீண்டப் பெறுபவோ மற்று;

மாண்ட எறித்த படை போல் முடங்கி மடங்கி,

நெறித்துவிட்டன்ன நிறை ஏரால் என்னைப் . . . .

பொறுக்கல்லா நோய் செய்தாய்; பொறீஇ நிறுக்கல்லேன்;

நீ நல்கின் உண்டு, என் உயிர்

குறிப்புக் காண் வல்லுப் பலகை எடுத்து நிறுத்தன்ன

கல்லாக் குறள! கடும் பகல் வந்து எம்மை,

'இல்லத்து வா' என, மெய் கொளீஇ, எல்லா! நின் . . . .

பெண்டிர் உளர்மன்னோ? கூறு;

நல்லாய்! கேள்: உக்கத்து மேலும் நடு உயர்ந்து வாள் வாய

கொக்கு உரித்தன்ன கொடு மடாய்! நின்னை யான்

புக்கு அகலம் புல்லின், நெஞ்சு ஊன்றும்; புறம் புல்லின்,

அக்குளுத்து; புல்லலும் ஆற்றேன்; அருளீமோ, . . . .

பக்கத்துப் புல்லச் சிறிது

'போ, சீத்தை! மக்கள் முரியே! நீ மாறு, இனி; தொக்க

மரக் கோட்டம் சேர்ந்து எழுந்த பூங் கொடி போல,

நிரப்பம் இல் யாக்கை தழீஇயினர், எம்மைப்

புரப்பேம் என்பாரும் பலரால்; பரத்தை என் . . . .

பக்கத்துப் புல்லீயாய் என்னுமால்; தொக்க

உழுந்தினும் துவ்வா, குறு வட்டா! நின்னின்

இழிந்ததோ, கூனின் பிறப்பு?' 'கழிந்து ஆங்கே,

"யாம் வீழ்தும்" என்று தன் பின் செலவும், உற்றீயாக்

கூனி குழையும் குழைவு காண்'; . . . .

'யாமை எடுத்து நிறுத்தற்றால், தோள் இரண்டும் வீசி,

யாம் வேண்டேம் என்று விலக்கவும், எம் வீழும்

காமர் நடக்கும் நடை காண்' 'கவர் கணைச்

சாமனார் தம்முன் செலவு காண்க';

ஓஒ! காண், நம்முள் நகுதல் தொடீஇயர், நம்முள் நாம் . . . .

உசாவுவம்; கோன் அடி தொட்டேன்;

ஆங்கு ஆக! சாயல் இன் மார்ப! அடங்கினேன்; 'ஏஎ!

பேயும் பேயும் துள்ளல் உறும்' எனக்

கோயிலுள் கண்டார் நகாமை வேண்டுவல்;

தண்டாத் தகடு உருவ! வேறாகக் காவின் கீழ்ப் . . . .

போதர்; அகடு ஆரப் புல்லி முயங்குவேம்

துகள் தபு காட்சி அவையத்தார் ஓலை

முகடு காப்பு யாத்துவிட்டாங்கு.

மருதக் கலி

← பாடல் 1822பாடல் 1824 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்