நூல்கள்›கலித்தொகை›பாடல் 1822

பாடல் 1822

வண்டு ஊது சாந்தம் வடுக் கொள நீவிய,

தண்டாத் தீம் சாயற் பரத்தை, வியல் மார்ப!

பண்டு, இன்னை அல்லைமன்; ஈங்கு எல்லி வந்தீய,

கண்டது எவன்? மற்று உரை;

நன்றும் தடைஇய மென் தோளாய்! கேட்டீவாயாயின் . . . .

உடன் உறை வாழ்க்கைக்கு உதவி உறையும்

கடவுளர்கண் தங்கினேன்;

சோலை மலர் வேய்ந்த மான் பிணை அன்னார் பலர், நீ

கடவுண்மை கொண்டு ஒழுகுவார்;

அவருள், எக் கடவுள்? மற்று அக் கடவுளைச் செப்பீமன் . . . .

'முத்து ஏர் முறுவலாய்! நாம் மணம் புக்கக்கால்,

"இப் போழ்து போழ்து" என்று அது வாய்ப்பக் கூறிய

அக் கடவுள், மற்று அக் கடவுள் ' 'அது ஒக்கும்

நா உள் அழுந்து தலை சாய்த்து நீ கூறும்;

மாயமோ; கைப்படுக்கப் பட்டாய் நீ; கண்டாரை . . . .

வாயாக யாம் கூற வேட்டீவாய்! கேள், இனி;

பெறல் நசை வேட்கையின் நின் குறி வாய்ப்பப்

பறி முறை நேர்ந்த நகாராக, கண்டார்க்கு

இறு முறை செய்யும் உருவொடு, நும் இல்,

செறி முறை வந்த கடவுளைக் கண்டாயோ; . . . .

நறுந் தண் தகரமும் நானமும் நாறும்

நெறிந்த குரல் கூந்தல் நாள் அணிக்கு ஒப்ப,

நோக்கின் பிணி கொள்ளும் கண்ணொடு, மேல் நாள், நீ

பூப் பலி விட்ட கடவுளைக் கண்டாயோ;

ஈர் அணிக்கு ஏற்ற ஒடியாப் படிவத்துச் . . . .

சூர் கொன்ற செவ்வேலாற் பாடி, பல நாளும்,

ஆராக் கனை காமம் குன்றத்து நின்னொடு

மாரி இறுத்த கடவுளைக் கண்டாயோ;

கண்ட கடவுளர்தம்முளும், நின்னை

வெறி கொள் வியன் மார்பு வேறாகச் செய்து, . . . .

குறி கொளச் செய்தார் யார்? செப்பு: மற்று யாரும்

சிறு வரைத் தங்கின் வெகுள்வர்; செறு தக்காய்!

தேறினேன்; சென்றீ நீ செல்லா விடுவாயேல்,

நல் தார் அகலத்துக்கு ஓர் சார மேவிய

நெட்டிருங் கூந்தற் கடவுளர் எல்லார்க்கும் . . . .

முட்டுப்பாடு ஆகலும் உண்டு.

மருதக் கலி

← பாடல் 1821பாடல் 1823 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்