நூல்கள்›கலித்தொகை›பாடல் 1821

பாடல் 1821

புன வளர் பூங் கொடி அன்னாய்! கழியக்

கனவு எனப்பட்டது ஓர் காரிகை நீர்த்தே:

முயங்கிய நல்லார் முலை இடை மூழ்கி,

மயங்கி, மற்று ஆண்டு ஆண்டுச் சேறலும் செல்லாது,

உயங்கி இருந்தார்க்கு உயர்ந்த பொருளும்; . . . .

அரிதின் அறம் செய்யா, ஆன்றோர், உலகும்,

உரிதின் ஒருதலைப்பு எய்தலும் வீழ்வார்ப்

பிரிதலும் ஆங்கே புணர்தலும் தம்மில்

தருதல் தகையாதான் மற்று;

நனவினால் போலும், நறுநுதால்! அல்கல் . . . .

கனவினால் சென்றேன் கலி கெழு கூடல்

வரை உறழ் நீள் மதில் வாய் சூழ்ந்த வையைக்

கரை அணி காவினகத்து;

உரை, இனி தண்டாத் தீம் சாயல் நெடுந்தகாய்! அவ் வழிக்

கண்டது எவன் மற்று நீ; . . . .

கண்டது உடன் அமர் ஆயமொடு அவ் விசும்பு ஆயும்

மட நடை மா இனம், அந்தி அமையத்து,

இடன் விட்டு இயங்கா இமையத்து ஒரு பால்,

இறை கொண்டு இருந்தன்ன நல்லாரைக் கண்டேன்,

துறை கொண்டு உயர் மணல்மேல் ஒன்றி நிறைவதை, . . . .

ஓர்த்தது இசைக்கும் பறை போல், நின் நெஞ்சத்து

வேட்டதே கண்டாய், கனா;

'கேட்டை விரையல் நீ; மற்று வெகுள்வாய்!' 'உரை' 'ஆண்டு

இதுவாகும், இன் நகை நல்லாய்! பொதுவாக

தாம் கொடி அன்ன தகையார் எழுந்தது ஓர் . . . .

பூங் கொடி வாங்கி, இணர் கொய்ய, ஆங்கே

சினை அலர் வேம்பின் பொருப்பன் பொருத

முனை அரண் போல உடைந்தன்று, அக் காவில்

துனை வரி வண்டின் இனம்

மற்று ஆங்கே நேர் இணர் மூசிய வண்டு எல்லாம் அவ் வழிக் . . . .

காரிகை நல்லார் நலம் கவர்ந்து உண்ப போல் ஓராங்கு மூச,

அவருள்,

ஒருத்தி, செயல் அமை கோதை நகை;

ஒருத்தி, இயல் ஆர் செருவில் தொடியொடு தட்ப;

ஒருத்தி, தெரி முத்தம், சேர்ந்த, திலகம்; . . . .

ஒருத்தி, அரி மாண் அவிர் குழை ஆய் காது வாங்க,

ஒருத்தி, வரி ஆர் அகல் அல்குல் காழகம்;

ஒருத்தி, அரி ஆர் ஞெகிழத்து அணி சுறாத் தட்ப:

ஒருத்தி, புலவியால் புல்லாதிருந்தாள், அலவுற்று

வண்டினம் ஆர்ப்ப, இடை விட்டுக் காதலன் . . . .

தண் தார் அகலம் புகும்;

ஒருத்தி, அடி தாழ் கலிங்கம் தழீஇ, ஒரு கை

முடி தாழ் இருங் கூந்தல் பற்றி, பூ வேய்ந்த

கடி கயம் பாயும், அலந்து

ஒருத்தி, கணம் கொண்டு அவை மூச, கை ஆற்றாள், பூண்ட . . . .

மணம் கமழ் கோதை பரிபு கொண்டு, ஓச்சி,

வணங்கு காழ் வங்கம் புகும்;

ஒருத்தி, இறந்த களியான் இதழ் மறைந்த கண்ணள்,

பறந்தவை மூசக் கடிவாள், கடியும்

இடம் தேற்றாள் சோர்ந்தனள், கை; . . . .

ஆங்க, கடி காவில் கால் ஒற்ற, ஒல்கி ஒசியாக்

கொடி கொடி தம்மில் பிணங்கியவை போல்,

தெரியிழை ஆர்ப்ப மயங்கி இரிவுற்றார், வண்டிற்கு

வண்டலவர்; கண்டேன், யான்'

நின்னை நின் பெண்டிர் புலந்தனவும், நீ அவர் . . . .

முன் அடி ஒல்கி உணர்த்தினவும், பல் மாண்

கனவின் தலையிட்டு உரையல்; சினைஇ யான்

செய்வது இல் என்பதோ? கூறு;

பொய் கூறேன் அன்ன வகையால் யான் கண்ட கனவு தான்

நல் வாயாக் காண்டை நறுநுதால்! 'பல் மாணும் . . . .

கூடிப் புணர்ந்தீர்! பிரியன்மின்; நீடிப்

பிரிந்தீர்! புணர் தம்மின்' என்பன போல,

அரும்பு அவிழ் பூஞ் சினைதோறும் இருங் குயில்

ஆனாது அகவும் பொழுதினான், மேவர,

நான்மாடக்கூடல் மகளிரும் மைந்தரும் . . . .

தேன் இமிர் காவில் புணர்ந்திருந்து ஆடுமார்,

ஆனா விருப்போடு அணி அயர்ப, காமற்கு

வேனில் விருந்து எதிர்கொண்டு.

மருதக் கலி

← பாடல் 1820பாடல் 1822 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்