நூல்கள்›கலித்தொகை›பாடல் 1819

பாடல் 1819

கண்டேன், நின் மாயம் களவு ஆதல்; பொய்ந் நகா,

மண்டாத சொல்லித் தொடாஅல்; தொடீஇய நின்

பெண்டிர் உளர்மன்னோ, ஈங்கு;

ஒண்தொடி! நீ கண்டது எவனோ தவறு?

கண்டது நோயும் வடுவும் கரந்து, மகிழ் செருக்கி, . . . .

பாடு பெயல் நின்ற பானாள் இரவில்

தொடி பொலி தோளும், முலையும், கதுப்பும்,

வடிவு ஆர் குழையும், இறையும், பொறையா

ஒடிவது போலும் நுசுப்போடு, அடி தளரா,

ஆராக் கவவின் ஒருத்தி வந்து அல்கல் தன் . . . .

சீர் ஆர் ஞெகிழம் சிலம்ப, சிவந்து, நின்

போர் ஆர் கதவம் மிதித்தது அமையுமோ?

ஆயிழை ஆர்க்கும் ஒலி கேளா, அவ் எதிர்

தாழாது எழுந்து நீ சென்றது அமையுமோ?

மாறாள் சினைஇ, அவள் ஆங்கே, நின் மார்பில் . . . .

நாறு இணர்ப் பைந் தார் பரிந்தது அமையுமோ?

'தேறு நீ; தீயேன் அலேன்' என்று மற்று அவள்

சீறடி தோயா இறுத்தது அமையுமோ?

கூறு இனி; காயேமோ, யாம்;

தேறின், பிறவும் தவறு இலேன் யான்; . . . .

அல்கல் கனவுகொல் நீ கண்டது;

'கனை பெயல் தண் துளி வீசும் பொழுதில் குறி வந்தாள்

கண்ட கனவு' என, 'காணாது, மாறு உற்று

பண்டைய அல்ல, நின் பொய்ச் சூள், நினக்கு; எல்லா!

நின்றாய்; நின் புக்கில் பல' . . . .

மென் தோளாய்! நல்கு, நின் நல் எழில்; உண்கு

ஏடா! குறை உற்று நீ எம் உரையல்! நின் தீமை

பொறை ஆற்றேம் என்றல் பெறுகுமோ,

யாழ நிறை ஆற்றா நெஞ்சு உடையேம்.

மருதக் கலி

← பாடல் 1818பாடல் 1820 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்