நூல்கள்›கலித்தொகை›பாடல் 1791

பாடல் 1791

ஏஎ இஃது ஒத்தன், நாண் இலன் தன்னொடு

மேவேம் என்பாரையும் மேவினன் கைப்பற்றும்

'மேவினும், மேவாக்கடையும், அஃது எல்லாம்

நீ அறிதி; யான் அஃது அறிகல்லேன்; பூ அமன்ற

மெல் இணர் செல்லாக் கொடி அன்னாய்! நின்னை யான் . . . .

புல் இனிது ஆகலின், புல்லினென்' எல்லா!

தமக்கு இனிது என்று, வலிதின் பிறர்க்கு இன்னா

செய்வது நன்று ஆமோ மற்று?'

சுடர்த் தொடீ! போற்றாய் களை, நின் முதுக்குறைமை; போற்றிக் கேள்!

வேட்டார்க்கு இனிது ஆயின் அல்லது, நீர்க்கு இனிது என்று . . . .

உண்பவோ, நீர் உண்பவர்?

செய்வது அறிகல்லேன்; யாது செய்வேன்கொலோ

ஐ வாய் அரவின் இடைப்பட்டு, நை வாரா?

'மை இல் மதியின் விளங்கும் முகத்தாரை

வௌவிக் கொளலும் அறன்' எனக் கண்டன்று; . . . .

'அறனும் அது கண்டற்றாயின், திறன் இன்றி,

கூறும் சொல் கேளான், நலிதரும்; பண்டு நாம்

வேறு அல்லம் என்பது ஒன்று உண்டால்; அவனொடு

மாறு உண்டோ , நெஞ்சே! நமக்கு.

குறிஞ்சிக் கலி

← பாடல் 1790பாடல் 1792 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்