நூல்கள்›கலித்தொகை›பாடல் 1790

பாடல் 1790

எல்லா! இஃது ஒத்தன் என் பெறான்? கேட்டைக் காண்:

செல்வம் கடைகொள, சாஅய், சான்றவர்

அல்லல் களை தக்க கேளிருழைச் சென்று,

சொல்லுதல் உற்று, உரைகல்லாதவர் போல

பல் ஊழ் பெயர்ந்து என்னை நோக்கும்; மற்று யான் நோக்கின், . . . .

மெல்ல இறைஞ்சும் தலை;

எல்லா! நீ முன்னத்தான் ஒன்று குறித்தாய்போல் காட்டினை;

நின்னின் விடாஅ நிழல் போல் திரிதருவாய்!

என், நீ பெறாதது? ஈது என்?

சொல்லின், மறாதீவாள் மன்னோ, இவள்? . . . .

செறாஅது ஈதல், இரந்தார்க்கு ஒன்று, ஆற்றாது வாழ்தலின்,

சாதலும் கூடுமாம் மற்று

இவள் தந்தை காதலின் யார்க்கும் கொடுக்கும், விழுப் பொருள்;

யாது, நீ வேண்டியது?

பேதாய்! பொருள் வேண்டும் புன்கண்மை ஈண்டு இல்லை; யாழ . . . .

மருளி மட நோக்கின் நின் தோழி என்னை

அருளீயல் வேண்டுவல், யான்

"அன்னையோ?" மண்டு அமர் அட்ட களிறு அன்னான்தன்னை ஒரு

பெண்டிர் அருளக் கிடந்தது எவன்கொலோ?'

ஒண்தொடீ! நாண் இலன் மன்ற இவன் . . . .

ஆயின், ஏஎ!

'பல்லார் நக்கு எள்ளப்படு மடல்மா ஏறி,

மல்லல் ஊர் ஆங்கண் படுமே, நறும் நுதல்

நல்காள் கண்மாறிவிடின்' எனச் செல்வானாம்

எள்ளி நகினும் வரூஉம்; இடைஇடைக் . . . .

கள்வர் போல் நோக்கினும் நோக்கும்; குறித்தது

கொள்ளாது போகாக் குணன் உடையன், எந்தை தன்

உள்ளம் குறைபடாவாறு.

குறிஞ்சிக் கலி

← பாடல் 1789பாடல் 1791 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்