நூல்கள்›கலித்தொகை›பாடல் 1773

பாடல் 1773

கதிர் விரி கனை சுடர்க் கவின் கொண்ட நனஞ் சாரல்

எதிரெதிர் ஓங்கிய மால் வரை அடுக்கத்து,

அதிர் இசை அருவி தன் அம் சினை மிசை வீழ,

முதிர்இணர் ஊழ் கொண்ட முழவுத்தாள் எரிவேங்கை,

வரி நுதல் எழில் வேழம் பூ நீர் மேல் சொரிதர, . . . .

புரி நெகிழ் தாமரை மலர் அம் கண் வீறு எய்தி

திரு நயந்து இருந்தன்ன தேம் கமழ் விறல் வெற்ப!

தன் எவ்வம் கூரினும், நீ செய்த அருள் இன்மை

என்னையும் மறைத்தாள், என் தோழி அது கேட்டு,

நின்னை யான் பிறர் முன்னர்ப் பழி கூறல் தான் நாணி, . . . .

கூரும் நோய் சிறப்பவும் நீ, செய்த அருள் இன்மை

சேரியும் மறைத்தாள், என் தோழி அது கேட்டாங்கு,

'ஓரும் நீ நிலையலை' எனக் கூறல் தான் நாணி;

நோய் அட வருந்தியும், நீ செய்த அருள் இன்மை

ஆயமும் மறைத்தாள், என் தோழி அது கேட்டு, . . . .

மாய நின் பண்பு இன்மை பிறர் கூறல் தான் நாணி,

என ஆங்கு,

இனையன தீமை நினைவனள் காத்தாங்கு,

அனை அரும் பண்பினான், நின் தீமை காத்தவள்

அரும் துயர் ஆர் அஞர் தீர்க்கும் . . . .

மருந்து ஆகிச் செல்கம், பெரும! நாம் விரைந்தே.

குறிஞ்சிக் கலி

← பாடல் 1772பாடல் 1774 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்